புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அத்தியாவசியமான மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சிவா குற்றம் சாட்டினார். இதையடுத்து அவைகளை உடனடியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், "இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் தரப்பட்டு வந்த மாத்திரை நான்கு மாதங்களாக யாருக்கும் தரப்படுவதில்லை. இந்த மாத்திரையை யாருக்கும் கொடுக்காமல், மருந்தாளுநர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, ஏழை நோயாளிகளிடம் மருந்து இருப்பு இல்லை, வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறித் திருப்பி அனுப்புகின்றனர்.
அந்த மாத்திரையை சாப்பிடவில்லை என்றால் மாரடைப்பு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் உள்ளது. ஒரு வாரத்திற்கான இந்த மாத்திரையின் விலை ரூ.600. ஏழை மக்களால் எப்படி சமாளிக்க முடியும். ஏழை மக்களை அலைக்கழிக்க வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், மேற்கண்ட மருந்து இருதய நோயாளிகளுக்கு தடை இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
இதற்கு பதில் அளித்துப்பேசிய முதல்வர் ரங்கசாமி, "என் கவனத்துக்கு வந்துள்ளது. நிறைய மருந்துகள் வாங்கவேண்டியுள்ளது. உடனடியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். " என்றார்.