‘தெலுங்கிலும் பேசிப் பார்த்தேன்’ - சட்டமன்றத்தில் பொள்ளாச்சி ஜெயராமனை கிண்டலடித்த கே.என்.நேரு!


சென்னை: முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் தெலுங்கில் பேசினாலும் திரும்பி பார்க்க மாட்டார் என அமைச்சர் கே.என்.நேரு பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.

இன்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது அதிமுகவின் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், “மாண்புமிகு பேரவைத் தலைவருக்கு நன்றி, பொள்ளாச்சி நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 174 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது. 22 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு தருவது இத்திட்டம். ஆனால் 2 ஆண்டுகளாக 7ஆயிரம் வீடுகளுக்கு மட்டும்தான் இணைப்பு தரப்பட்டு உள்ளது. இன்னும் 15 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு தராமல் காலதாமதம் செய்யப்படுகிறது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். உடனடியாக மீதம் உள்ள வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்கிறேன்” என கூறினார்.

இதற்கு பதிலளித்த நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, “ பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, சபாநாயகருக்கு நன்றி என்று சொன்னார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவர் எங்களை பார்க்கவே மாட்டார். தெலுங்கிலும் பேசிப்பாத்துட்டேன், தமிழிலும் பேசிப்பாத்துட்டேன். பார்க்கவே மாட்டார். பாதாள சாக்கடை திட்டம் புதியதாக போடப்பட்ட இடங்களில் இணைப்புகள் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக 15 ஆயிரம் இணைப்புகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார். பொள்ளாச்சி ஜெயராமனிடம் தெலுங்கில் பேசியதாக அமைச்சர் கே.என்.நேரு பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.

x