விழுப்புரம்: மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்ம ராஜா திரௌபதி அம்மன் கோயிலில், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி பட்டியலின மக்கள் உள்ளே சென்றபோது மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கோயிலுக்கு நுழைய விடாமல் தடுத்தது தொடர்பான வழக்கின் விசாரனை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் இரு தரப்பினரும் கோயிலில் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிபாட்டுக்கு வருவோரை தடுத்தால், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் கடந்த பிப். 20-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 20 நாட்களுக்கு மேலாகியும், மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தாமதப்படுத்துகிறது; மார்ச் 21 அன்று பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் சென்று வழிபட இருக்கிறோம். இதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில், இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 11 பேரும், பிற சமூகத்தைச் சேர்ந்த 12 பேரும் கலந்து கொண்டனர். அப்போது பிற சமூக தரப்பைச் சேர்ந்தவர்கள், நீதிமன்ற உத்தரவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். அதே நேரத்தில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தத இக்கோயில் விவகாரத்தில் முடிவெடுக்க, ஊர் மக்களிடம் பேச வேண்டியது இருக்கிறது. இதற்காக நாளை (மார்ச் 21) வரை தங்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து இதுதொடர்பான பேச்சுவார்த்தை இன்றும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.