‘நாங்கள் பாஜகவின் அடிமை அல்ல, ராஜதந்திரிகள்’ - திமுகவுக்கு கே.பி.முனுசாமி பதிலடி!


சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் எங்களை பாஜகவின் அடிமை என்று சொல்கிறார்கள். நாங்கள் அடிமை அல்ல, ராஜதந்திரிகள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, " 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்துக்கு கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்தியாவில் எத்தனையோ முதல்வர்கள் இருந்தார்கள், ஒருவராலும் இதுபோல செய்ய முடியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் எங்களை பாஜகவின் அடிமை என்று சொல்கிறார்கள். நாங்கள் அடிமை அல்ல, ராஜதந்திரிகள். ஆட்சி அதிகாரம் ஸ்டாலின் கையில் இல்லை, பல பேரின் கையில் உள்ளது.

இன்று கல்வி நிதி ரூபாய் 2500 கோடி மத்திய அரசு கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள். 100 நாள் வேலை திட்ட நிதி ரூபாய் 3796 கோடி மத்திய அரசு தரவில்லை என்று பட்ஜெட்டில் இருக்கிறது. மாநில முதல்வர், மத்திய அரசிடம் ஏன் நிதியை வாங்க முடியவில்லை?. இந்த 4 ஆண்டுகளில் நீங்கள் செய்தது என்ன?. வருடத்துக்கு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

மத்திய அரசிடம் நாங்கள் பல்வேறு திட்டங்களை கேட்டு பெற்றோம். யாரை எப்படி பயன்படுத்த வேண்டும், யாரை எப்படி வழிக்கு கொண்டுவர வேண்டும், எப்படி பணத்தை பெறவேண்டும் என்ற திறமைமிக்கவர் எடப்பாடி பழனிசாமி. உங்களால் முடியவில்லையே?” என்றார்

x