மண் குவாரி சுடுகாட்டில் மர்ம பூஜையா? - கடலூர் அருகே கிராம மக்கள் ஆவேசம்


கடலூர்: புவனகிரி வட்டத்துக்கு உட்பட்ட புதுச்சத்திரம் அருகே கொத்தட்டை, அத்தியாநல்லுார், பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சவுடு மண் குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து வருவதால் குடியிருப்பு மற்றும் சுற்று வட்டாரத்தில் குடிநீர் பாதிப்பு ஏற்படும் என்று கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விதிமுறை மீறி செயல்பட்ட சவுடு மண் குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதும், அதன் பின், மீண்டும் செயல்படுவதும் தொடர்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அத்தியாநல்லுார் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 6-ம் தேதி, பெட்ரோல் கேனுடன் உயர் மின்அழுத்தம் செல்லும் கம்பத்தில் ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். போலீஸார் சமாதானம் செய்து அவரை கீழே இறக்கினர்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த நாளே அப்பகுதி குவாரிகளை மூட வேண்டும் என்று குவாரிக்கே சென்று மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கனி மவளத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. எதிர்ப்பு தீவிரமாக உள்ள நிலையில், இப்பகுதி சவுடு மண் குவாரிகளை கிராம மக்கள் நடத்த விடமாட்டார்கள் என்ற பயத்தில் குவாரி உரிமையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மண் குவாரி தொடர்ந்து நடக்க வேண்டும் என்று விரும்பிய குவாரி உரிமையாளர் ஒருவர், கடந்த இரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் அத்தியாநல்லூர் மண் குவாரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாமியார் ஒருவரை வர வழைத்து அர்த்தஜாம பூஜை செய்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.

“மணல் குவாரி பகுதியில் இரவு நேரத்தில் வெளிச்சம் தெரிந்தது. எங்களில் சிலர் ஒன்று திரண்டு, அங்கு சென்று பார்த்தோம். அங்குள்ள சுடுகாடு அருகே சாமியார் ஒருவர் பூஜை செய்து கொண்டிருந்தார். எங்களில் சிலர் அவரைப் பிடித்து கேட்ட போது, அவர் பதில் எதுவும் பேசவில்லை. அவரை அங்கிருந்து விரட்டியடித்தோம்” என்று இப்பகுதியில் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, “எந்த பூஜை செய்தாலும் இனி இப்பகுதியில் மண் குவாரி நடத்த முடியாது. இதுபோன்ற மூட நம்பிக்கை யில் நாங்கள் சிக்க மாட்டோம். இம்மாதிரியான அச்சுறுத்தல்கள் மூலம் எங்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, எங்கள் பகுதிகளில் உள்ள சவுடு மண் குவாரிகளை மூடி எங்களது வாழ் வாதாரத்தை காத்துக் கொள்வோம்” என்று சுற்று வட்டார கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

x