சென்னை: சென்னை ஏரிகள் குழாய் மூலம் இணைக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டமிட்டிருப்பதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் துணைக் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கையில், “சென்னையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தினமும் 900 மில்லியன் லிட்டர்தான் குடிநீர் வழங்கப்பட்டது.
இப்போது தினமும் 1100 மில்லியன் லிட்டர் வழங்கப்படுகிறது. அடுத்தாண்டு கோடை வரை தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் வழங்கும் அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீரை சீராக விநியோகிக்க சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை சுற்றுச்சாலை குழாய் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்" என்றார்.
50 சுகாதார மையங்கள்: பேரவையில் வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமார் பேசும்போது, “வாணியம்பாடி தொகுதி, திம்மாம்பேட்டை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளிக்கையில், “திம்மாம்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சாத்தியமில்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமானால் அப்பகுதியில் மக்கள் தொகை 30 ஆயிரமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 8,213 துணை சுகாதார நிலையங்களும் 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. தமிழகத்தில் கூடுதலாக 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கு தமிழகம் அதற்கான இலக்கை எட்டிவிட்டது என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.