சென்னை: கடந்த 2023 டிசம்பரில் சென்னை மணலி பகுதியில் இருந்து சிபிசிஎல் நிறுவனம் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய் படலம் பரவி, கடலில் கலந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து இதை வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் ரூ.73 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் சிபிசிஎல் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
‘எண்ணெய் கசிவு குறித்து ஐஐடி இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் அபராதம் செலுத்த உத்தரவிட்டது நியாயமற்றது’ என சிபிசிஎல் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மாசு கட்டுப்பாடு வாரியம் அபராதம் வசூலிக்க தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்தது.