“மாநிலங்களில் ஒரு மொழியை மத்திய அரசு திணிக்கக் கூடாது” - விக்கிரமராஜா


திருவள்ளூர்: “மாநிலங்களில் ஒரு மொழியை மத்திய அரசு திணிக்கக் கூடாது” என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்து, மறைந்த முன்னாள் சங்க நிர்வாகி படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அவரது தலைமையில் வணிகர்கள் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளின்போது செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியது: “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42-வது வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், வணிகர்களை வாட்டி வதைக்கும் வரி விதிப்பு முறைகளில் இருந்து, வணிகர்கள் பாதுகாத்திடவும், கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆன் லைன் வர்த்தகம் மூலம் 27 சதவீத வர்த்தகம் சுரண்டப்பட்டுள்ள நிலையில் வணிகர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தமிழகத்தில் இந்தி படிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவ, மாணவியர் ஏற்கெனவே இந்தி பயின்று வருகின்றனர். அந்தந்த மாநிலங்களில், மாநில அரசுகள் மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மாநிலங்களில் ஒரு மொழியை மத்திய அரசு திணிக்கக் கூடாது. மும்மொழி கொள்கை விஷயத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தரக் கூடாது.

தமிழகத்தில் வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகைகள் வைத்திட வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே ஆங்கில பெயர் பலகைகள் வைத்து வருகின்றன.

நெருக்கடியான சாலை பகுதிகள், வணிக நிறுவனங்கள் அருகே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூடவேண்டும். தமிழகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் நடமாட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்கவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

x