நீலகிரியில் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்காததை கண்டித்து பொறியாளர்கள் மண் சாப்பிட்டு நூதன போராட்டம்


உதகை: நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து நீலகிரி கட்டிடப் பொறியாளர்கள் சங்கத்தினர் பொறியாளர்கள் மண் சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில்‌ கட்டிட அனுமதி வழங்காமல்‌ நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ‌மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நீலகிரி கட்டிட பொறியாளர் ‌சங்கம்‌ சார்பில் ஏடிசி சுதந்திர திடலில் இன்று மண் சாப்பிடும் நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு நீலகிரி கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் திலக், செயலாளர் மாதஷ், பொருளாளர் ஹரிஹரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கட்டிட பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது‌குறித்து சங்க தலைவர் திலக், செயலாளர் மாதஷ்‌ கூறும்போது, “ஏழை‌ பொதுமக்களும்‌, கட்டுமான துறையை நம்பி பிழைக்கும்‌ பலதரப்பட்ட தொழிலாளர்களும் நீண்ட காலமாக பாதிப்படைந்து வரும்‌நிலையில், ‌தற்போது கூடுதலாக 11 சதவிகிதம்‌ கட்டுமானப் பொருட்களின்‌ விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக எம்சாண்ட்‌, ஜல்லி போன்ற அடிப்படைப் பொருட்கள்‌ விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கட்டிட அனுமதி எவ்வித காரணமும் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்காமல் உள்ளது. இந்த மாவட்ட நிர்வாகத்தின்‌ நிலைப்பாட்டை புரிந்துகொள்ள இயலாத நிலையில்,‌ இனி நீலகிரி மாவட்டத்தில் வாழ்வதா இல்லை சாவதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்‌. கட்டிட அனுமதி குழுவின்‌ தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர் ‌கால‌தாமத்துக்கான‌ காரணத்தை‌ வெளிப்படையாக கூற வேண்டும்'' என்று அவர் கூறினார்.

x