தஞ்சையில் குடியிருப்புகளுக்கு நடுவே தார் தயாரிப்பு கலவை ஆலை: ஆட்சியரிடம் 10 கிராம மக்கள் புகார்


தஞ்சை: குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்கு இடையே தார் தயாரிப்பு கலவை ஆலை அமைக்க 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று தஞ்சாவூர் ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ராயமுண்டான்பட்டியைச் சேர்ந்த வெ.ஜீவக்குமார் தலைமையில், ராமநாதபுரம், சக்கர சாமந்தம், சீராளுர், பள்ளியேறி, வடகால், வெண்ணலோடை, மரவனப்பத்து, 8-ம் நம்பர் கரம்பை, ரெட்டிப்பாளையம், களிமேடு ஆகிய 10 கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:

தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் தனிநபர் தார் தயாரிப்பு ஆலை தொடங்கி நடத்தி வருகிறார். ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் போன்ற பல்வேறு உடல் நல கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சக்கரசாமந்தம் அருகே புதிதாக மற்றொரு தார் தயாரிப்பு ஆலை தொடங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, முறையான அரசு அனுமதியுடன் ஆலை தொடங்க உள்ளதாக பதில் அளிக்கின்றனர்.

குடியிருப்புகள் மற்றும் விவசாய விளை நிலங்களுக்கு இடையே ஏற்கெனவே இயங்கி வரும் கலவை ஆலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் அந்த பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்து வருவதால் அவற்றுக்கும் பாதிப்பு உண்டாகிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தார் கலவை ஆலையில் இந்து வெளி வரும் கரும்புகை, பெரிய கோவிலையும் அதன் பழமையையும் சிதைக்கும் அபாயம் உள்ளது.

x