தஞ்சை: கும்பகோணத்தில் டாஸ்மாக் கடையை மூடி, கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாவட்ட நிர்வாகி உட்பட 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் நிறுவன முறைகேட்டை கண்டித்து நேற்று முன்தினம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அக்கட்சியினர், கும்பகோணம் காமராஜ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை நடந்து கொண்டிருந்தபோதே ஊழியர்களை கடைக்குள் வைத்து ஷட்டரை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, கும்பகோணம் மேற்கு போலீஸார், முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்தவரும், பாஜகவின் மத்திய அரசின் நலத்திட்டப் பிரிவு மாவட்டச் செயலாளர் உ.கார்த்தி (41), உறுப்பினர்கள் கீழக்கொருக்கையைச் சேர்ந்த ஆ.கலையரசன்(49), கவரைத் தெருவைச் சேர்ந்த ப.தினேஷ்(38), ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.
டாஸ்மாக் கடையை மூடி, ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தது உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாகி உள்ள ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.