பள்ளிவாசல் இடம் இல்லை; திசையன்விளை போக்குவரத்து கழக பணிமனையை காலி செய்யும் உத்தரவுக்கு தடை


நெல்லை: திசையன்விளையில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை காலி செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் திசையன்விளை வட்டாட்சியர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு: நெல்லை திசையன்விளை பகுதியில் உள்ள முகைதீன் காதர் சாகிப் ஆண்டவர் ஜும்மா பள்ளி வாசலுக்கு சொந்தமான பகுதியில், அரசு போக்குவரத்து கழக பணிமனை குத்தகை அடிப்படையில் இயங்கி வந்தது. குத்தகை பணம் செலுத்தாததால் பணிமனையை காலி செய்ய உத்தரவிடக் கோரி பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பணிமனையை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

திசையன்விளை பகுதியில் 81 சென்ட் நிலத்தில் பள்ளிவாசல் மற்றும் இடுகாடு அமைந்துள்ளது. அருகேயுள்ள 35 சென்ட் நிலம் நத்தமாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அந்த இடத்தை பள்ளிவாசல் நிர்வாகம் பயன்படுத்தி வந்துள்ளது. அதில் தான் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வந்தது. பின்னர் அந்த இடம் பள்ளிவாசலுக்கு சொந்தமானது இல்லை என தெரியவந்ததும் குத்தகை பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டது.

குறிப்பிட்ட அந்த இடம் பள்ளிவாசலுக்கு சொந்தமானது என்பது தொடர்பாக எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. வருவாய் ஆவணங்களி லும் நத்தம் புறம்போக்கு என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு போக்குவரத்து கழக பணிமனையை காலி செய்யும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், குறிப்பிட்ட இடம் பள்ளி வாசலுக்கு சொந்தமானது என்பது தொடர்பாக எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

x