மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் ஓய்வூதிய அறக்கட்டளை நிர்வாகிக்கு சிறை தண்டனை வழங்கி தனி நீதிபதி காலையில் பிறப்பித்த உத்தரவுக்கு, மாலையில் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது.
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி 2024ல் ஓய்வு பெற்றவர் மணிவண்ணன். இவருக்கு பணிபுரியும் போது 50 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கபட்டது. ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியத்தில் 5 சதவீத அகவிலைப்படி தான் வழங்கப்பட்டது. எனவே எனக்கு மீதமுள்ள 45 சதவீத டிஏ (அகவிலைப்படி ) கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து அகவிலைப்படி வழங்க 20.06.2024ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிர்வாகம் நிறைவேற்றாததால் மணிவண்ணன் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. கும்பகோணம் நிர்வாக இயக்குநர் பொன்முடி, ஓய்வூதிய அறக்கட்டளை நிர்வாகி பாமா ஆகியோர் நேரில் ஆஜராகினர். இருவரும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, இருவருக்கும் இரண்டு வார சாதாரண சிறை தண்டனை மற்றும் ரூ. ஆயிரம் அபராதம் விதித்தும், இருவரும் பதிவாளர் முன்பு சரண் அடைய வேண்டும், பின்னர் இருவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதேபோல் ஷீலா ஜெயந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும், இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த இரு உத்தரவும் காலையில் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாலையில் இரு நீதிபதிகள் அமர்வில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, இரு அவமதிப்பு வழக்குகளில் தண்டனை வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, அடுத்த விசாரணையை ஏப். 1க்கு தள்ளிவைத்தனர்.