கிருஷ்ணகிரி: பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஓசூரில் ரோஜா மலர் வர்த்தகம் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, செயற்கை மலர்கள் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் நல்ல மண் வளம் காரணமாக விவசாயிகள் சாமந்தி, ரோஜா மற்றும் அலங்கார மலர்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட கொய் மலர்களை சுமார் 3 ஆயிரம் ஹெக்டரில் பசுமைக் குடில் மற்றும் திறந்த வெளியில் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் உற்பத்தியாகும் ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா, தாஜ்மஹால் உள்ளிட்ட மலர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிலையில், வெளிநாடுகளில் மலர் சாகுபடி அதிகரித்துள்ள நிலையில், ஓசூர் மலர்களுக்கு வரவேற்பு குறைந்துள்ளது.
இதனால், ஓசூர் பகுதியில் விளையும் ரோஜா மலர்கள் உள்நாட்டு விற்பனையை மட்டும் நம்பியுள்ள நிலையுள்ளது. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாகக் கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தோரணம், மேடை அலங்காரத்துக்கு இயற்கை மலர்களுக்குப் பதில் செயற்கையான பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், ஓசூர் மலருக்குச் சந்தையில் தொடர்ந்து விலையும், விற்பனையும் குறைந்து வருகிறது.
இதுதொடர்பாக மலர் விவசாயிகள் கூறியதாவது: ஓசூரில் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளது. இதில், 80 சதவீதம் மலர் சாகுபடி நடக்கிறது. இதை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் நிலவும் போட்டி காரணமாக வெளிநாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி 60 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், உள்நாட்டு வர்த்தகத்தை மலர் விவசாயிகள் நம்பியுள்ளனர். இந்நிலையில், விழாக்கள், திருமண விழாவில் பிளாஸ்டிக் அலங்கார மலர்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், இயற்கை மலர்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவுக்கு, சீனா, தாய்லாந்து, பாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் ரோஜா வரத்து அதிகரித்துள்ளது. இதை வடமாநில வியாபாரிகள் வாங்கி வந்து கர்நாடக மற்றும் ஓசூர் பகுதியில் விற்பனை செய்கின்றனர். இதனால், இயற்கையாக விளையும் ரோஜா மலருக்கு வரவேற்பு குறைந்துள்ளது. 20 பூக்கள் ஒரு கட்டு ரோஜா ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனையான நிலையில், தற்போது ஒரு கட்டு ரூ.50-க்கும், ஒரு பூ ரூ.3-க்கும் விற்பனையாகிறது.
ஓசூரில் ஆண்டுக்கு ரோஜா மூலம் ரூ.500 கோடி வர்த்தகம் நடந்த நிலையில், தற்போது, ரூ.250 கோடியாகக் குறைந்துள்ளது. இந்தியா அளவில் ரூ.2.50 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், 30 சதவீதம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பிளாஸ்டிக் பூக்கள் இறக்குமதிக் கும், விற்பனைக்கும் தடை விதித்து, இயற்கை மலர் விவசாயத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.