‘தமிழகத்தில் முற்றாகச் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கு’ - நெல்லை ஜாகிர் உசேன் கொலைக்கு சீமான் கண்டனம்


சென்னை: திமுக அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், அலட்சியமே ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி படுகொலை செய்யப்படக் காரணமாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதியின் தனிப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடானது. சட்டம்-ஒழுங்கு என்பதே திமுக ஆட்சியில் இல்லாமல் போய்விட்டது என்பதற்கு ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற படுகொலைகளே தக்கச் சான்றாகும்.

ஜாகிர் உசேன் பிஜிலி அவர்கள், வக்பு சொத்தை மீட்கும் முயற்சியில், தன்னைக் கொலை செய்ய ஒரு கும்பல் முயல்வதாகக் கடந்த சனவரி மாதமே சமூக வலைதளத்தில் காணொளி மூலம் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பிறகும், உரியப் பாதுகாப்பு அளிக்காமலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்காமலும் தமிழ்நாடு காவல்துறை அலட்சியமாக இருந்ததே ஜாகிர் உசேன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முதன்மை காரணமாகும்.

காவல்துறையைத் தம்முடைய நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள ஓராண்டிற்காவது முற்றாகச் சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஐயா ஜாகிர் உசேன் பிஜிலி அவர்களைப் படுகொலை செய்த கொலையாளிகளை விரைந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், அவரது குடும்பத்தினருக்கு உரிய துயர் துடைப்பு உதவிகளை உடனடியாக வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x