ராமநாதபுரம்: ராமேசுவரம் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என்பதால் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பது தாமதமாகலாம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமேசுவரம் ரயில் நிலையத்தை ரூ.90.20 கோடி செலவில் மறுசீரமைப்பதற்காக கடந்த 2022 மே 26ல் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ரயில்நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சூழலமைப்பு, எதிர்காலத்துக்குத் தேவையான உள் கட்டமைப்பு மற்றும் விமான நிலையத்தைப் போன்ற வசதிகளை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் 7,158 சதுர மீட்டர் பரப்பில் புதிய இரண்டு மாடிக் கட்டிடம், பயணிகளின் வசதிக்காக 2 நகரும் படிக்கட்டுகள், 4 மின் தூக்கிகள், பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிப் பறைகள், ரயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள், வர்த்தக மையங்கள், பயணிகள் ரயில் நிலையத்திதுக்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் மேற்கூரையுடன் கூடிய நடைபாதைகள் இதில் அடக்கம்.
மறுசீரமைப்புப் பணிகளில் ராமேசுவரம் புதிய ரயில் நிலையக் கட்டிடம் ராமேசுவரம் கோயில் போன்ற தோற்றத்திலும், இதற்கான தூண்கள் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத் தூண்கள் போலவும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், நடை மேடைகள் எண் 3, 4 மற்றும் 5 ஆகியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, பாம்பன் புதிய ரயில் பாலப்பணிகளுக்காக 2022 டிசம்பர் மாதம் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ராமேசுவரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் வரையிலும் இயக்கப்படுகிறது. அதே சமயம், பாம்பன் புதிய பாலத்தின் பணிகள் கடந்த நவம்பர் மாதமே முடிந்துவி்ட்டன. மண்டபத்தில் இருந்து பராமரிப்புப் பணிகளுக்காக பயணிகள் இன்றி காலி ரயில் பெட்டிகள் பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குப் பராமரிப்புப் பணிகளுக்காக தினமும் கொண்டு செல்லப்படுகின்றன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ''ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் 65 சதவீதம் நிறைவடைந்துள்ளன. முழுமையாகப் பணிகள் நிறைவடைந்து ஆகஸ்ட் மாதம் ரயில் நிலையத்தைத் திறக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதேநேரம் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பதற்குத் தயாராக இருந்தும் ராமேசுவரம் ரயில் நிலையத்துடன் பாலத்தைத் திறக்கலாமா என்று மத்திய ரயில்வே அமைச்சக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பதும் தாமதமாகும்," என்றனர்.