கோவை: குற்றங்களை தடுக்கவும், மகளிரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் கேமரா பொருத்தும் நடவடிக்கையை, காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதேபோல், அரசுப் பேருந்துகளிலும் கேமராக்களை பொருத்த நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்றச் சம்பவங்களை தடுக்க, மாநகர காவல் துறையினர் சார்பில் தொடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கடந்த வாரம் கோவை பாலசுந்தரம் சாலையில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் சிசிடிவி கேமரா அமைத்து அவசரகால தொடர்பு கருவி (எஸ்.ஓ.எஸ் பட்டன்) பொருத்தப்பட்டது. இது மாநகரில் உள்ள மற்ற பேருந்து நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
மேலும், மாநகர காவல்துறையின் சார்பில், ‘க்யூஆர்’ கோடு கடந்தாண்டு இறுதியில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் தொடர்பு கொண்ட பெண்கள், பேருந்துகளில் கேமரா பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வலியுறுத்தியி ருந்தனர். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்ல பெண்கள் அதிகளவில் பேருந்துகளை பயன்படுத்து கின்றனர்.
எனவே, மகளிரின் கோரிக்கையை ஏற்று பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கையை போலீஸார் துரிதப்படுத்தினர். தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கேமரா பொருத்துவது கட்டாயம் என அறிவுறுத்தப் பட்டது. அதன்படி, தனியார் பேருந்துகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இது குறித்து மாநகர காவல் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் அசோக்குமார் கூறும்போது, ”கோவை மாநகரில் நகரப் பகுதிகளுக்கும், வெளியூர்களுக்கும் என மொத்தம் 139 தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இதில் 114 தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. ஒரு பேருந்தில் ஏறும் இடம், இறங்கும் இடம், முகப்புப் பகுதி மற்றும் உட்பகுதிகள் என குறைந்தபட்சம் 6 இடங்களில் கேமரா பொருத்தி, காட்சிகளை பதிவு செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மீதமுள்ள 25 பேருந்துகள் எஃப்.சிக்கு செல்லும்போது பொருத்திவிடுவதாக உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். அதேபோல, அரசுப் பேருந்துகளிலும் கேமராக்களை பொருத்த, அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம். பேருந்துகளில் குற்றங்களைத் தடுக்கவும், மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இக்கேமராக்கள் உதவும்” என்றாா்.