சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்; தமிழக ஆட்சியாளர்கள் தூங்குவதுபோல நடிக்கின்றனர்: ராமதாஸ் குற்றச்சாட்டு


சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுக்கும் அதிகாரம் இருந்தும் தமிழக ஆட்சியாளர்கள் தூங்குவதுபோல நடிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தெலங்கானாவில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சாதி கணக்கெடுப்பை அம்மாநில காங்கிரஸ் அரசு நடத்தியுள்ளது. அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை 29 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது.

அடுத்தக்கட்டமாக பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்கவும் தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அதனடிப்படையில் இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மையாகவே சமூகநீதிப் புரட்சிதான். இது வரலாற்று சிறப்பாகும். தமிழகத்தில் உள்ள அரசு சமூகநீதிக்கான ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடாது.

எந்த மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தலாம். அதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை கூறியுள்ளன. இவையெல்லாம் தமிழக அரசுக்கு தெரிந்தும் கணக்கெடுப்பை நடத்த மாட்டார்கள். காரணம், அவர்கள் தூங்கவில்லை. தூங்குவது போல நடிக்கின்றனர். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

x