திமுகவின் ஏமாற்று அரசியல்: வேலூர் இப்ராஹிம் கருத்து


திமுகவின் ஏமாற்று அரசியலுக்கு முஸ்லிம்கள் பலியாகி விடக்கூடாது என பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வக்பு திருத்த சட்டம் குறித்து திமுக தவறானப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்களுக்கான சட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு திரித்துப் பேசப்படுகின்றன என்பதை பொதுக்கூட்டம், பிரச்சாரம், துண்டறிக்கை மூலம் மக்களிடம் கொண்டு செல்வோம். வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராகப் பேசும் திமுகவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். குறிப்பிட்ட மதம், ஜாதி, இனத்தை தாஜா செய்யும் அரசியல் இனி நடக்காது.

திமுக நாடாளுமன்றத்தில் ஒரு மாதிரியாகவும், மாநிலத்தில் மற்றொரு மாதிரியாகவும் நடிக்கிறது. திமுகவின் ஏமாற்று அரசியலுக்கு முஸ்லிம்கள் பலியாகிவிடக் கூடாது. முஸ்லிம்களை அச்சுறுத்தும் எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் பிரச்சாரத்தை முறியடிப்போம். முஸ்லிம்களின் உண்மையான காவலனாக பாஜக இருக்கிறது என்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

பாஜக வாக்கு வங்கிக்காக எந்த சமூகத்தையும், மதத்தையும் அரவணைப்பது கிடையாது. வக்பு திருத்தச் சட்டம் வாக்கு வங்கிக்கானது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

x