மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரை மதநல்லிணக்க மாநாட்டில் நீதிபதி, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசியதாக எம்.பி சு.வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முருககணேசன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
மதுரை வழக்கறிஞரும், பாஜக வழக்கறிஞர் அணி மாவட்ட துணைத் தலைவருமான முருக கணேசன் மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் இன்று கொடுத்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் மார்ச் 25ல் நல்லிணக்க கூட்டமும், மார்ச் 9 ல் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு இருவேறு அமைப்புகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை நிலவுகிறது. கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பங்குனி திருவிழா நடக்கும் நிலையில், கூட்டம் நடத்த அனுமதித்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறி அனுமதி மறுத்தார்.
இது பற்றி மதுரை கேகே. நகர் கிருஷ்ணய்யர் மகாலில் கடந்த 9-ம் தேதி மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு மாநாட்டில் சு. வெங்கடேசன் எம்.பி பேசியுள்ளார். அப்போது அவர் ''திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உனக்கு தேவையான தீர்ப்பை எழுதி கொடுத்துவிட்டு, நாளை ஓய்வு பெற்ற பிறகு ஒரு மாநிலத்தில் கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை நாங்கள் ஒரு போதும் செய்யமாட்டோம். தீயை பற்ற வைத்தவனும், தீயை அணைப்பவனும் ஒன்று என, சொன்னால் உன்னை போல் முட்டாள் இந்த உலகில் இல்லை.
தீயை பற்ற வைப்பவன் அழிவு சக்தி. தீயை அணைப்பவர் காக்கும் சக்தி. எங்களுக்கு கூச்சமில்லை. எந்த துறை என்றாலும், எந்த உயரிய பதவியில் இருந்தாலும் எந்த முகமூடி போட்டாலும் அயோக்கியன்தான்,'' என, உயர்நீதிமன்ற நீதிபதியை பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக ஒருமையில் பேசியதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மக்கள் பிரதிநிதியான அவர் இந்திய ஜனநாயகத்தில் கடவுளுக்கு நிகரான, அரசியலமைப்பு சாசன சட்டத்தை பாதுகாக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் சாமானிய மக்கள் நம்பிக்கையாக விளங்கும் நீதிமன்ற தீர்ப்பின் மீதும் அவநம்பிக்யை உண்டாக்கும் வகையில் பேசி இருக்கிறாார். நீதிபதி வழங்கிய தீர்ப்பினை சுய ஆதாயம் பெறும் குற்றமுறு உள்நோக்கத்தில் தீர்ப்பு வழங்கியதாகவும், நீதிபதியின் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பி விளம்பர பிரியராக செயல்பட்டு பேசியுள்ளார்.
பொது வெளியில் ஆதாரம், ஆவணமின்றி உயர்நீதிமன்ற நீதிபதியை பேசியது நீதிமன்ற அவமதிப்பு, தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமான பழிச்சாட்டுதல் ஆகும். நடுநிலையாக செயல்படவேண்டிய மக்கள் பிரதிநிதி என்பதை பொருட்படுத்தாமல் நீதிமன்றம், நீதிபதி , தீர்ப்பின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசிய எம்பி சு.வெங்கடேசன் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞர் முருக கணேசனிடம் கேட்டபோது, ''எம்பிக்கு எதிராக கடந்த 13ம் தேதியை ஆன்லைன் மூலம் மதுரை மாநகர காவல் ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளேன். இதனடிப்படையில் எழுத்துப் பூர்வமாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல் ஆய்வாளர் மோகன் என்னை அழைத்தார். இதன்படி, எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளேன்,'' என்றார்.