3 ஆண்டுக்கு மேலாக சீரமைக்கப்படாத பள்ளிப்பட்டு பாலம்: உயர்மட்ட பாலம் அமைக்க கோரும் மக்கள்


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாத சொரக்காய்பேட்டை - நெடியம் தரைப்பாலம். கடந்த ஆண்டு இறுதியில் பெய்த வடகிழக்கு பருவமழையால் மேலும் பலமிழந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ளது சொரக்காய்பேட்டை மற்றும் நெடியம் ஆகிய கிராமங்கள். இவ்விரு கிராமங்களுக்கு இடையே பாய்கிறது திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றான கொசஸ்தலை ஆறு. இந்த ஆற்றில், பள்ளிப்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணையின் உபரி நீர் மற்றும் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம்.

அவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக சொரக்காய்பேட்டை மற்றும் நெடியம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 350 மீட்டர் நீளம் கொண்ட தரைப்பாலம் நீரில் முழ்குவதும், சேதமடைவதும் வழக்கமாக நடைபெறும். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சொரக்காய்பேட்டை- நெடியம் தரைப்பாலம் முழுமையாக சீரமைக்கப்படாததால் மேலும் பலமிழந்துள்ளது.

இதுகுறித்து, சொரக்காய்பேட்டை, நெடியம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது: பள்ளிப்பட்டு வட்டத்துக்குட்பட்ட சொரக்காய்பேட்டை, பொம்மராஜிபேட்டை, கீழப்பூடி, மேலப்பூடி, பெருமாநெல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள், கைலி உள்ளிட்டவை உற்பத்தி செய்வதற்கு தேவையான பாவு, நூல் உள்ளிட்ட மூலப் பொருட்களை வாங்கவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மொத்த விற்பனையாளர்களிடம் அளிக்கவும் ஆந்திர மாநிலம் நகரி, ஏகாம்பரகுப்பம், புத்தூர், சத்திரவாடா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அதற்கு, நகரி-பள்ளிப்பட்டு சாலையை இணைக்கும் நெடியம் சாலையில், சொரக்காய்பேட்டை மற்றும் நெடியம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சொரக்காய்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தேங்காய், மாங்காய் உள்ளிட்ட வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக நகரி, புத்தூர் உள்ளிட்ட ஆந்திர மாநில சந்தைகளுக்கு எடுத்து செல்ல இந்த தரைப்பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், சொரக்காய்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு செல்ல நெடியம், கரும்பேடு, குமாரராஜபேட்டை, புண்ணியம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், மாணவ-மாணவியர் சொரக்காய்பேட்டை- நெடியம் தரைப்பாலத்தையே பயன்படுத்தவேண்டியுள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சொரக்காய்பேட்டை - நெடியம் தரைப்பாலம் கடந்த 12 ஆண்டுகளில், பலமுறை மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. இப்பாலத்தை அவ்வப்போது, தற்காலிகமாக சீரமைப்பதும், மழைக்காலத்தில் சீரமைக்கப்பட்ட பகுதிகள் சேதமடைவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சொரக்காய்பேட்டை - நெடியம் தரைப்பாலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதனால், கடந்த ஆண்டு இறுதியில் பெய்த வடகிழக்கு பருவமழையால் மேலும் பலமிழந்துள்ளது. ஆகவே, பாலத்தில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மட்டும் இந்த தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நெசவாளர்கள், விவசாயிகள், கர்ப்பிணிகள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே, சொரக்காய்பேட்டை- நெடியம் தரைப்பாலத்துக்கு மாற்றாக, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “சொரக்காய்பேட்டை - நெடியம் தரைப்பாலத்துக்கு மாற்றாக, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்க, தமிழக நெடுஞ்சாலை துறையின் நபார்டு மற்றும் கிராம சாலை அலகு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதி கிடைத்த உடன் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கும்” என்றார்.

x