புதுச்சேரி: புதுச்சேரியில் 24 கி.மீ. நீளமுள்ள கடற்கரை பாதுகாப்புக்கு ரூ.1,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் இரு துறைகள் அனுமதி கிடைத்துள்ளது என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டார். புதுவை சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
எதிர்கட்சித்தலைவர் சிவா: மீனவ கிராமங்களை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க என்சிசிஆர் அறிவித்த திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? எந்தெந்த கடலோர கிராமங்களில் இந்த பணி நடக்கிறது. கடல் வளத்தை மீட்க மீன்வளத்தை பெருக்க கடலோர கிராமங்களில் 10 இடங்களில் செயற்கை பாறை திட்டுக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன?
அமைச்சர் லட்சுமிநாராயணன்: புதுவையில் கடலோர மீனவ கிராமங்களில் தூண்டில் முள் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்கை பாறை திட்டுகள் அமைக்க ரூ.4.34 கோடியில் மத்திய அரசின் நிர்வாக, செலவின ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. செயற்கை பாறை திட்டுகள் அமைக்க பொருத்தமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. புதுவையில் 10 இடங்களிலும், காரைக்காலில் 4 இடங்களிலும் செயற்கை பாறை திட்டங்கள் வார்க்கும் பணி இந்த மாதத்தில் தொடங்கப்படும்.
எதிர்கட்சி தலைவர் சிவா: நபார்டு வங்கி மூலம் எந்த திட்டத்தையும் எளிதில் செயல்படுத்த முடியாது. வில்லியனுார் தொகுதியில் நபார்டு வங்கி மூலம் செயல்படுத்த முயற்சி எடுத்த திட்டங்கள் 20 ஆண்டாக கிடப்பில் கிடந்தது. கடலோர பகுதிகளை ஆய்வு செய்து மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்யாணசுந்தரம் (பாஜக): காலாப்பட்டு துாண்டில் முள் வளைவு அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலதாமதம் ஆனால் பல பிரச்சினைகள் உருவாகும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: புதுவையின் 24 கிமீ தொலைவு உள்ள கடற்கரைக்கு பாதுகாப்பை வலுப்படுத்த ரூ.1,000 கோடியில் திட்டமிட்டுள்ளோம். உலக வங்கி நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் 2 துறைகள் அனுமதி வழங்கிவிட்டனர். இன்னும் ஒரு துறையின் அனுமதி கிடைக்க கோப்பு சென்றுள்ளது. இதன்பின் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து காரைக்காலிலும் ஆய்வு நடத்தி செயல்படுத்துவோம்.