தமிழக அரசை பாராட்டுவது திமுக கூட்டணிக்கான முன்னோட்டமா? என்ற கேட்ட கேள்விக்கு, கூட்டணி நிலைப்பாடு குறித்து தேர்தலின்போது தெரிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மழுப்பலாக பதில் அளித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2006-ல் தேமுதிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்களைத்தான் தற்போது தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். இதை நாங்கள் வரவேற்கிறோம். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இதுவும் நாங்கள் அறிவித்த திட்டம்தான். விவசாயிகளுக்கான திட்டங்களும் நாங்கள் ஏற்கெனவே அறிவித்ததுதான்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை எழுந்தால், தமிழக அரசுடன் இணைந்து போராடுவோம். தமிழகத்தில் மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சியினரை காவல் துறையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. ஆளுங்கட்சியை எதிர்த்து போராடுபவர்களைக் கைது செய்வது வழக்கமானதுதான்.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளியே கொண்டுவர வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.
அப்போது, ‘தமிழக பட்ஜெட்டை பாராட்டியுள்ளீர்களே, இதை 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முன்னோட்டமாக எடுத்துக் கொள்ளலாமா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பிரேமலதா, ‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. எங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்து தேர்தல் நெருங்கும்போது தெரிவிப்போம். எங்களது தேர்தல் அறிக்கையிலிருந்த திட்டங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதால், அதற்கு வரவேற்பு தெரிவித்தோம்’ என்று மழுப்பலாக பதில் அளித்தார்