சென்னை: தேர்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் திமுகவினர் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தற்போது தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீஸார் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இதேபோல கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் செய்ததாக அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக நடந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதி, அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.