விழுப்புரம்: இதுவரையில் 5 முறைக்கு மேல் என்னை கொலை செய்ய வந்த கும்பல் தோல்வியடைந்து திரும்பியிருக்கின்றன. என் மீது என்ன குற்றச்சாட்டு சொல்ல முடியும். என்னை கொல்வதற்காக ஆயுதங்களோடு திரியவேண்டிய தேவை எங்கிருந்து எழுந்தது? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார்
விசிக தேர்தல் வெற்றி விழா பொதுக் கூட்டம் நேற்று இரவு விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திருமாவளவன் திமுவில் 2க்கும், 3க்கும் போய் நின்று கொண்டிருக்கிறார் என விமர்சனம் செய்கிறார்கள். நான் கண்ட களங்களை உன்னால் பட்டியலிட முடியுமா?. எத்தனை கொதிநிலையில் மக்களோடு போய் நின்றிருக்கிறோம். என்னுடைய உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்கிற நிலையில் களத்தில் நின்றிருக்கிறோம். ஒரு இடத்தில் கொடி ஏற்றிவிட்டு இன்னொரு இடத்தில் கொடியேற்ற முடியுமா என்கிற அளவுக்கு, அந்த தூரத்தை கடப்பதே எங்களுக்கு ஒரு சவால். அது ஒரு யுத்தக் களத்தை போல நாங்கள் சந்தித்துள்ளோம்.
இதுவரையில் 5 முறைக்கு மேல் என்னை கொலை செய்ய வந்த கும்பல் தோல்வியடைந்து திரும்பியிருக்கின்றன. எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள் என்மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டா?. வேறு ஏதேனும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டேன் என்ற குற்றச்சாட்டா? தனிபட்ட முறையிலே யாருடைய பிரச்சினையிலாவது தலையிட்டேன் என்ற குற்றச்சாட்டா?. பொருளாதாரத்துக்காக நான் யாரையாவது மிரட்டி தொல்லை செய்திருக்கிறேனா? என் மீது என்ன குற்றச்சாட்டு சொல்ல முடியும். என்னை கொல்வதற்காக ஆயுதங்களோடு திரியவேண்டிய தேவை எங்கிருந்து எழுந்தது?.
எத்தனை களங்களில் தூக்கம் இன்றி நின்று போராடியிருக்கிறேன். இதையெல்லாம் சொல்ல மாட்டார்கள். திமுகவுக்கு சொம்படிக்கிறேன் என்பார்கள். இது அற்பர்களின் விமர்சனம். இதற்கு ஒருபோதும் இசைந்துவிடக்கூடாது. எந்த கட்சியோடு கூட்டணி என்பது வெறும் எண்ணிக்கைக்காக அல்ல. நாளைய தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறேன்” எனத் தெரிவித்தார்