குடிநீர் திட்ட பணி சரியில்லை; தெருவில் உருவான திடீர் பள்ளம்: திருப்புவனம் பேரூராட்சி மக்கள் சிரமம்


திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில் குடிநீர் திட்டப் பணி முறையாக மேற்கொள்ளாததால், தெருவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.16 கோடியில் குடிநீர் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, வைகை ஆற்றில் 2 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள். 5 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 18 வார்டுகளிலும் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது.

குழாய்கள் பதித்த பின் கான்கிரீட் கலவையை கொட்டி மூடாததால், 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் 18-வது வார்டில் மதுரை மெயின் சாலை யில் இருந்து முஸ்லிம் நடுத்தெருவுக்குள் நுழையும் இடத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. சாக்கடை கால்வாய் பாலமும் சேதமடைந்தது. இதனால், அத்தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரவு நேரங்களில் சென்று வர முடியாமல் சிரமப் படுகின்றனர். இதேபோல், நகரின் பல இடங்களிலும் சாலைகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

மேலும், சோதனை ஓட்டத்தின் போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் வெளியேறி வருகிறது. அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து இப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது.

x