சிவகாசி மாநகராட்சியில் ரூ.16 கோடியில் புதிய அலுவலகம் கட்டும் பணி பல மாதங்களாக மந்தமாக நடப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் பள்ளபட்டி, செங்கமலநாச்சியார்புரம், ஆணையூர் உள்ளிட்ட 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக பேருந்து நிலையம் அருகே சாத்தூர் சாலையில் 1.75 ஏக்கரில் 47 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்ட கடந்த 2023 ஜூனில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கின.
புதிய மாநகராட்சி அலுவலகத்தின் கீழ் தளத்தில் 15,970 சதுர அடி பரப்பளவில் பார்க்கிங், தரை தளத்தில் 15,920 சதுர அடி பரப்பில் மேயர், கமிஷனர், துணை மேயர் அறைகள், வரி வசூல் மையம், ஆய்வு கூட்ட அரங்கு, முதல் தளத்தில் 14,638 சதுர அடியில் பொறியியல் பிரிவு, 100 கவுன்சிலர்கள் அமரும் வகையிலான கூட்ட அரங்கு, சுகாதாரம், நகரமைப்பு என பல்வேறு துறைகளுக்கு தனித்தனி அறைகளுடன் கட்டப் படுகிறது.
இந்நிலையில், 2024 பிப்ரவரியில் கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலில் துரிதமாக தொடங்கிய பணிகள் அதன்பின் மந்தமாகி பல மாதங்களாக பணிகள் தேக்கமடைந்துள்ளன. புதிய அலுவலகத்துடன் சேர்த்து அடிக்கல் நாட்டப்பட்ட ரூ.5 கோடி மதிப்பில் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 20 மாதங்கள் ஆகியும் கட்டுமானப் பணி நிறைவடையாததால் அப்பகுதி முழுவதும் புதர் மண்டி சமூகவிரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரூ.6 கோடி கூடுதல் நிதி எதற்கு?: புதிதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி, தாம்பரம், கடலூர், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம் ஆகிய 6 புதிய மாநகராட்சிகளுக்கும் ஒரே வடிவமைப்பில் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டது. சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.10 கோடியில் புதிய அலுவலகம் கட்ட பணிகள் தொடங்கி, 8 மாதம் கழித்து திட்ட மதிப்பில் 60 சதவீதம் கூடுதலாக ரூ.6 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனாலும், தொடர்ந்து பணிகள் மந்தமாக நடக்கின்றன. ரூ.6 கோடி நிதியில் கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதா அல்லது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதா என்பதை மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.