திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே அங்கன்வாடி மையத்தில் அழுகிய காய்கறிகளைச் சமைத்து அதைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதாலும், சுகாதாரம் இல்லாத குடிநீரால் பல நோய்த் தொற்றுகளுக்குக் குழந்தைகள் ஆளாகி வருவதாகக் கூறி அங்கன்வாடி மையத்தைப் பெற்றோர் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பானேரி பகுதியில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த மையத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியில் புழுக்களும், பூச்சிகளும் மிதப்பதால் அந்த தண்ணீரைக் கொண்டே சமைத்தும், அந்த தண்ணீரையே குழந்தைகளுக்குக் குடிநீராக வழங்குவதால் குழந்தைகள் பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்துப் பெற்றோர்கள் நேற்று முன்தினம் அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, ”வளையாம்பட்டு ஊராட்சியில் உள்ள 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாப்பானேரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். இந்த மையத்தில் குழந்தைகளுக்குத் தண்ணீர் வழங்கக் கூடிய தொட்டி பல மாதங்களாகச் சுத்தம் செய்யாமல் புழுக்கள் மிதக்கும் வகையில் அசுத்தமாக உள்ளது. இந்த தண்ணீரையே குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள்.
இந்த தண்ணீரைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவுகிறது. சமையலுக்குப் பயன்படுத்தும் காய் கறிகள் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதால் அழுகிய காய் கறிகளை வாங்கி வந்து அதைச் சமைத்து குழந்தைகளுக்கு வழங்குகின்றனர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச் சத்து மாவு, முட்டை உள்ளிட்டவற்றைக் குழந்தைகளுக்கு முறையாக வழங்குவதும் இல்லை.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. தரமற்ற முறையில் உணவுகள் சமைத்து வழங்குகின்றனர். இதையெல்லாம் அதிகாரிகள் கண்டு கொள்வதும் இல்லை. பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகள் அச்சத்துடன் இங்கு வருகின்றனர். இதையெல்லா ம் சரி செய்ய வேண்டும் என இங்குள்ள ஆசிரியை, மற்றும் உதவியாளர் ஆகியோரிடம் தெரிவித்தால் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசு கின்றனர். குழந்தைகளுக்கு முறையாகப் பாடம் கற்றுத் தருவதில்லை. வருகை பதிவேடு கூட எழுதுவது கிடையாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இதை வலியுறுத்தியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.
இதையடுத்து, அவர்களிடம் கிராமிய காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.