திருப்பத்தூர்: 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அது நடக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஓபிஎஸ் அணியின் வாணியம்பாடி நகரச் செயலாளர் கோபி சங்கர் இல்ல நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, "முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், முன்னாள் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா ? என்பது குறித்துச் சம்பந்தப்பட்டவர்கள் தான் பதிலளிக்க வேண்டும். இருப்பினும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக-வின் மூத்த நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டவர் செங்கோட்டையன்.
பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இது நடக்க வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கும் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேரவேண்டும். அது நடந்தால் மட்டுமே வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
அமலாக்கத்துறை சோதனையில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது’’ என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.