தாராசுரம் 2-ம் ராஜராஜ சோழனின் ஜென்ம நட்சத்திரத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்: கோரிக்கை


படம்: சி.எஸ்.ஆறுமுகம்

கும்பகோணம் வட்டம் தாராசுரத்தில் 2-ம் ராஜராஜ சோழன் கட்டிய ஐராவதீஸ்வரர் கோயில், பாரம்பரிய கட்டிட கலைக்குச் சான்றாக விளங்கும் கோயில்களில் ஒன்று. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இக்கோயிலில் அடிக்கு ஒரு சிலை வீதம் 1,008 சிலைகள் உள்ளன.

மேலும், நந்தி மண்டபத்தில் சப்தஸ்வரம் ஒலி எழுப்பும் கருங்கல் படிக்கட்டுகள், நுணுக்கமான சிற்பங்கள், தேரால் ஆன மண்டபம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. வெளிநாடு மற்றும் உள்நாட்டு கட்டிட கலை ஆராய்ச்சியாளர்கள், இக்கோயிலில் ஆய்வு செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோயிலைக் கட்டிய 2-ம் ராஜராஜ சோழன் பிறந்த சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தை, அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்து கொண்டாட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியது: கட்டிட கலைக்குச் சான்றாக 2-ம் ராஜராஜ சோழன் கட்டிய தாராசுரம் தெய்வநாயகி உடனாய ஐராவதீஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலில் 1983 மே 8, 9 ஆகிய 2 நாட்கள், 2-ம் ராஜராஜ சோழனின் ஜென்ம நட்சத்திர விழா விமரி சையாக நடைபெற்றது. அதன்பிறகு 42 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களாக அந்த விழா நடைபெறவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு வரலாற்று ஆய்வாளர்கள் பலர் ஒன்றிணைந்து அவரது ஜென்ம நட்சத்திர விழாவைக் கொண்டாடினர். தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி மாத சதயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டிய முதலாம் ராஜேந்திரன் சோழன் பிறந்த ஆடி மாத திருவாதிரை ஆகிய 2 பேரின் ஜென்ம நட்சத்திர நாட்கள், அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல, ஏப்.25-ம் தேதி வரவுள்ள 2-ம் ராஜராஜ சோழனின் ஜென்ம நட்சத்திரமான சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளை, அரசு விழா வாக அறிவித்து, விடுமுறை அளித்து தமிழக அரசு விமரிசையாக கொண்டாட வேண்டும். இது தொடர்பாக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே முதல்வர் அறிவிக்க வேண்டும் என்றனர்.

x