அதிமுக இணைந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடரும்: டிடிவி.தினகரன் நம்பிக்கை


வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தாலும அமமுக தொடரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகே செம்பட்டி விடுதியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுகவின் வெற்றிக்கு அதிமுகவை மறைமுகமாக பயன்படுத்தி அக்கட்சியை அடகு வைத்துக் கொண்டிருக்கிறார் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி. அதிமுகவில் உள்ள 90 சதவீதம் பேரின் மனஓட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்.

அதேசமயம், செங்கோட்டையன் மூலம் கூட்டணியி்ல் சேர்க்க அதிமுகவை பாஜக அடிபணிய வைப்பதாக கூறுவது தவறு. அப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் பாஜகவுக்கு இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணியில் சேராமல் இருந்தால், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்கு மூடுவிழா நடத்தி விடுவார் பழனிசாமி. ஆகையில், தேர்தலுக்கு முன்னரே நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக் கூட்டணியில் அதிமுக இணைந்தாலும், அமமுக அந்த கூட்டணியில் தொடரும். தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் போதைக்கு அடிமையாகி கூலிப்படையாக இளைஞர்கள் மாறும் நிலை உள்ளது. தமிழக முதல்வரின் குடும்பத்தைத் தவிர, வேறு எவருக்கும் பாதுகாப்பு இல்லை.

தமிழகத்தில் எல்லாவற்றிலும் ஊழல், முறைகேடு நடந்துவருவதுடன், விலைவாசியும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதைப்பற்றி கவலைப்படாமல், தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். ஆனால், வரும் தேர்தலில் திமுகவின் கூட்டணியை முறியடித்து, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

x