சென்னை: டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம். தமிழகத்தில் மதுபானம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், கடைகள் மூடப்படவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டுக்காக பாஜக போராடுவதை நாங்கள் வரவேற்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ” டாஸ்மாக்கிற்கு எதிராக பாஜக குரல் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கு என்ற அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் மதுபானம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், கடைகள் மூடப்படவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டுக்காக போராடுபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அரசியல் காரணங்களுக்காக பாஜகவினர் போராடினால் அவர்களால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்கலாம். அதனை பாராட்டலாம். பாஜக ஆளும் மாநிலங்களிலும் மதுவிலக்கை அமல்படுத்தினால் முழு மனதோடு வரவேற்கலாம். கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் மது ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என திருமாவளவன் பேசினார்.