கோடையை இதமாக்கும் குளிர்நீர்: குழாய் பொருத்திய மண்பானை விற்பனை அமோகம்!


கிருஷ்ணகிரி: கோடைக்கு முன்னரே சுட்டெரிக்கும் வெயில் அடித்து வரும் நிலையில், தாகம் தணிக்க ஓசூர் பகுதியில் காலத்துக்கு ஏற்ற மாற்றமாக வந்துள்ள குழாய் பொருத்திய மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிராம மக்களின் வாழ்வியலுடன் கலந்ததாக மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு இருந்து வருகிறது. இதில், குறிப்பாக இயற்கையான குளிர்ச்சியைத் தரும் மண் பானை குடிநீர் பழக்கம் இன்று வரை நகரப்பகுதியிலும் தொடர்ந்து வருகிறது. தண்ணீர்ப் பந்தல் அமைப்பு முதல் பல்வேறு இடங்களிலும் மண் பானையின் பயன்பாடு தொடர்ந்தாலும், நகரப்பகுதியில் நாகரிக மாற்றத்தால், பாரம்பரியத்தை மறந்து வீடுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் கோடை காலங்களில் குளிர்சாதன பொட்டிகளில் வைக்கப்படும் பாட்டில் குடிநீர் பருகும் பழக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில், அண்மைக் காலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் பயன்பாட்டால் ஏற்படும் நோய்கள் பட்டியல் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் பாரம்பரிய வாழ்வியல் முறை தேடுதலை நகரப் பகுதி மக்களிடம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோடை காலங்களில் மண் பானையின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

இதனிடையே ஓசூரில் கோடைக்கு முன்னரே சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு போன்ற குளிர்ச்சியான பொருளைத் தேடிச் செல்கின்றனர். அதேபோல, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் குடிநீர் பயன்பாட்டுக்கு மண் பானைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு மண்பாண்ட தொழிலாளர்களும் நவீன காலத்துக்கு ஏற்ப குழாய் பொருத்திய மண் பானைகளை ஓசூர், பாகலூர், உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வது அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த காலங்களில் பொதுமக்கள் மத்தியில் மண் பானைக்கு போதிய வரவேற்பு இல்லாததால், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது மட்டும் மண் பானைகள் விற்பனை நடந்து வந்தன. தற்போது, பொதுமக்கள் மத்தியில் மண் பானை தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வரவேற்பும் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில ஆண்டாக நகரப் பகுதியிலும் மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

கோடை கால விற்பனையைக் கருத்தில் கொண்டு குழாய் பொருத்திய மண் பானைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில், 10 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை கொள்ளவு கொண்ட பானை ரூ.250 முதல் ரூ.400 விரை விற்பனையாகிறது. குழாய் பொருத்திய மண் பானைகளை பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அதிக எண்ணிக்கையில் வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x