சென்னை: தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை பேரவை செயலரிடம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் வழங்கி இருந்தார். ‘சட்டப்பேரவையில் அதிமுகவினர் அதிக நேரம் பேச அப்பாவு அனுமதிப்பது இல்லை. அதிமுகவினர் பேசுவதை ஒளிபரப்புவது இல்லை. பாரபட்சத்துடன் செயல்படும் அவரை நீக்க வேண்டும்’ என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 14, 15-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் 17-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தின் முடிவில் அப்பாவு தெரிவித்தார்.
அதன்படி, பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும், ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர்.
தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த உடனே, பேரவை தலைவர் இருக்கையில் இருந்து அப்பாவு வெளியே சென்றார். இதனையடுத்து தீர்மானம் தோல்வி அடைந்ததால், பேரவை தலைவர் அப்பாவு மீண்டும் இருக்கையில் அமர்ந்து அடுத்த அலுவல் நடவடிக்கைகளை தொடங்கினார்.