தமிழகத்தில் தேர்வு மையம் இல்லை எனும் ரயில்வேயின் விளக்கம் ஏற்புடையதல்ல: சு.வெங்கடேசன் விமர்சனம்


சென்னை: இந்தியாவிலேயே அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இரயில்வே தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்.இந்தியாவிலேயே அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல. தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பதவிக்கான ஆட்சேர்ப்பு பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 493 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு முடிந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 6,315 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்டமாக, இரண்டாம் நிலை தேர்வு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பெரும்பாலான தமிழர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ரயில்வே தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது; ரயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு முடிந்த அளவிற்கு சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கான கணிப்பொறி சார்ந்த முதல் கட்ட தேர்வு பல கால முறைகளில் நடந்தது. ஒவ்வொரு கால முறைக்கும் வேறு, வேறு கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டன. தேர்வர்கள் வசதிக்கென இரண்டாம் கட்ட தேர்வு ஒரே கால முறையில் , ஒரே மாதிரியான பொதுவான கேள்வித்தாளுடன் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக தேர்வர்களுக்கு முடிந்த அளவிற்கு சொந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலருக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் அருகிலுள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் மார்ச் 17 , 18 ஆகிய நாட்களில் ரயில்வே பாதுகாப்பு படை பணிகளுக்கான தேர்வுகள் முடிந்தவுடன் மார் 19 , 20 ஆகிய நாட்களில் உதவி லோகோ பைலட் பணிக்கு தேர்வுகள் நடக்கின்றன. இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு சொந்த மாநிலத்தில் குறிப்பிட்ட நகரத்திலுள்ள ஒரே தேர்வு மையங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை ரயில்வே தேர்வாணையத்தில் இரு பதிவிகளுக்கும் விண்ணப்பித்த 15,000 விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான ஒதுக்கீடு இந்தியாவிலுள்ள 21 ரயில்வே தேர்வு ஆணையங்களிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த இரண்டாம் கட்ட கணிப்பொறி சார்ந்த தேர்வுகளுக்கும் இதே ஒதுக்கிடு முறை தான் கடைபிடிக்கப்பட்டது. இந்த தேர்வுகளில் பங்கேற்ற வழக்கத்திலுள்ளபடி பட்டியலின மாணவர்களுக்கு இலவச பயண பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x