திண்டுக்கல்லில் முழுமையாக வெற்றிபெற திட்டம்: 3 மாவட்டங்களாக பிரிக்க திமுக முடிவு!


படம்: நா.தங்கரத்தினம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திமுகவை பலப்படுத்தி கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற முடிவு செய்துள்ள கட்சித் தலைமை, இதற்காக 2 மாவட்டமாக இருப்பதை 3 மாவட்டங்களாக மாற்றியமைக்க உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட திமுகவில் கிழக்கு, மேற்கு என 2 மாவட்ட அமைப்புகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4 கிழக்கு மாவட்டத்திலும், 3 மேற்கு மாவட்டத்திலும் உள்ளன. மாவட்டத்தின் மேற்கு எல்லையில் உள்ள பழநி தொகுதி கிழக்கு மாவட்டம் எனவும், கிழக்கு பகுதியில் உள்ள நத்தம் மேற்கு மாவட்டம் எனவும் தங்கள் வசதிக்கேற்ப மாவட்டத்தை பிரித்துக்கொண்டனர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் கட்சி நிர்வாகத்தைப் பலப்படுத்த வேடசந்தூர், நத்தம் தொகுதிகளைக் கொண்டு மூன்றாவதாக ஒரு மாவட்டத்தை உருவாக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

இதையடுத்து பழநி, ஒட்டன்சத்திரம் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், வேடசந்தூர், நத்தம் தொகுதிகள் ஒரு மாவட்டமாகவும், திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளை ஒரு மாவட்டமாகவும் பிரிக்க தலைமை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ள அமைச்சர் அர.சக்கரபாணியிடம் தற்போதுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியுடன் பழநி சேர்க்கப்பட உள்ளது.

கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ.விடம் இருந்த 4 தொகுதிகளில் பழநி தவிர்த்து திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய 3 தொகுதிகள் இடம்பெற உள்ளன. 3-வது மாவட்டமாக புதிதாக வேடசந்தூர், நத்தம் தொகுதிகள் அடங்கிய புதிய மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது. இந்த மாவட்டச் செயலாளர் பதவியை பெற முன்னாள் எம்எல்ஏ., மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் மற்றும் நிர்வாகிகள் பலர் முயற்சிக்கின்றனர்.

மாவட்டத்தின் 7 தொகுதிகளில் தற்போது திமுக - 4, அதிமுக - 3 வசமுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2016ல் தேர்தலை அதிமுக சந்தித்தபோது 3 தொகுதிகளையும், திமுக 4 தொகுதிகளையும் கைப்பற்றின. முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் 2021-ல் அதிமுக தேர்தலைச் சந்தித்தபோதும் அதிமுகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்தன. ஜெயலலிதா இல்லாமல் அதிமுக 2021 தேர்தலைச் சந்தித்தபோதும், திமுகவால் கூடுதல் தொகுதிகளைப் பெற முடியவில்லை. காரணம், அதிமுகவுக்கு என திண்டுக்கல் மாவட்டத்தில் கணிசமான வாக்கு வங்கிதான் காரணம்.

கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெற மாவட்டத்தில் திமுகவுக்கு அதிக களப்பணி தேவை என கட்சித் தலைமை உணர்ந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாவட்டங்களாக இருப்பதை 3 மாவட்டங்களைக் கொண்ட அமைப்பாக மாற்றியும் புதிய மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிக்கும் அறிவிப்பை திமுக தலைமை விரைவில் வெளியிட உள்ளது.

x