பாலியல் குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்


„ சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. இருப்பினும், பாலியல்ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் 400-க்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு, புதிதாக கட்சியில் இணைந்த நபர்களுக்கு கட்சியின் துண்டு அணிவித்து வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது: தமிழகத்தில் தமிழ் தேசிய அரசியல் வேகமாக வளர்த்து வருகிறது. தமிழ் தேசிய அமைப்புகளை விமர்சனம் செய்யாமல், மாற்று அரசியலை மேற்கொள்ள வேண்டும். 234 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும்.

அதிமுக என்பது மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் தொடங்கப்பட்ட இயக்கம். இது இப்போது பல்வேறு குழுவாக இயங்குகிறது. சிறந்த ஆளுமையாக உள்ள கட்சிகளை, பாஜக கட்சி, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை வைத்து இணைக்க முயற்சி செய்கிறது. பிரதமர் மோடியை செங்கோட்டையன் பாராட்டுவதை வைத்து மட்டும் எதுவும் சொல்லிவிட முடியாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என்ற சொல்ல முடியாது. ஆனால், பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெறுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு ரூ.10, ரூ.20 கூடுதலாக வாங்குவது நேரடியான கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் மதுபான முறைகேடு என்பது ரூ.1,000 கோடியா ரூ.5,000 கோடியா அல்லது ரூ.10,000 கோடியா என்பதை நேர்மையாக விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். தவறு இழைத்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x