நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து, தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.
பழநியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது. காரணம், 2006-ம் ஆண்டு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு அறிவிப்புகள், இந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழக விவசாயிகளை பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச்சென்று, வேளாண் தொழில்நுட்பங்களை அறியச் செய்து, தமிழகத்தில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது.
மெட்ரோ ரயில், பெண்களுக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளனர். வேலைவாய்ப்புக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதா என்பதன் உண்மைத்தன்மை குறித்து அமலாக்கத் துறை கண்டறிந்து, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தமிழகத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொண்டால், தமிழக மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து, தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும். இவ்வாறு அவர் கூறினார்