திமுக, அதிமுக என்ற ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழிக்க பிற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் 76 சாதிகள் ஒன்றிணைந்து பட்டியலினத்தில் உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி 2009-ம் ஆண்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதால், 15,000-க்கும் மேற்பட்ட உயர் பதவிகள் ஒரே சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த உள்ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்துவிட்டு, பட்டியலினத்தில் உள்ள 76 சாதிகளையும் உரிய கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மூலம் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படப்போவதில்லை. தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுப்பது ஏற்புடையதல்ல.
தமிழகத்தில் மதுபான ஆலைகளில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை சோதனையில் வெளி வந்திருப்பது வியப்பான தல்ல. அதே நேரத்தில், தமிழகத்தில் 19 மதுபான ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு உரிய வரிகள் செலுத்தப்படாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. இதில் பலனடைந்தவர்கள் குறித்தும் அமலாக்கத் துறை விசாரித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சரவையில் பங்கு தரும் கட்சிகளுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும். அவை அனைத்தும் ஓரணியில் திரண்டால்தான் திமுக, அதிமுக என்ற ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.