ஓராண்டு சிறை தண்டனை பெற்ற ஜவாஹிருல்லா எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி


ஓராண்டு சிறை தண்டனை பெற்ற ஜவாஹிருல்லாவின் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: கோவையில் 1997-ல் மருத்துவமனை உட்பட பல்வேறு இடங்களில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 58 பேர் பலியாகினர். 250-க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துகள் சேதம் அடைந்தன.

இந்த குண்டு வெடிப்பு நடத்தியவர்கள் குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்வதற்காக 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 54 லட்சத்து 88,508 ரூபாய் வசூலித்த வழக்கில் திமுக கூட்டணி எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவருமான ஜவாஹிருல்லா உட்பட நான்கு பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஜவாஹிருல்லா, எம்எல்ஏவாக பதவி வகிக்க தகுதியற்றவர். எனவே ஜவாஹிருல்லாவை உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

x