வெளி மாநில தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு: ஓசூர் விவசாயிகள் வேதனை


சந்தைக்கு வெளி மாநில தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாலும், உள்ளூரில் மகசூல் அதிகரித்துள்ளதாலும் விலை சரிந்துள்ளது. வியாபாரிகள் கிலோ ரூ.3-க்கு கொள்முதல் செய்வதால், ஓசூர் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளியைப் பல வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, கர்நாடக மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்தாண்டு தக்காளி மகசூல் பாதித்ததால், ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. அதேபோல, நிகழாண்டும் தக்காளிக்கு அதிக விலை கிடைக்கும் என ஓசூர் பகுதியில் விவசாயிகள் அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர்.

ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனையானது. இதையடுத்து, வியாபாரிகள் வெளி மாநில தக்காளியைக் கொள்முதல் செய்து, ஓசூர் பகுதியில் விற்பனை செய்தனர். இதனால் தக்காளி விலை படிப்படியாகக் குறைந்து ரூ.25-முதல் ரூ.30 வரை விற்பனையானது. தற்போது, வெளி மாநில தக்காளி வரத்தாலும், உள்ளூரில் மகசூல் அதிகரிப்பாலும், தக்காளி விலை சரிந்துள்ளது. விவசாயிகளிடம் கிலோ ரூ.3-க்கு தக்காளியை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். சில்லறை விற்பனையில் கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டை போல, தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என நினைத்துப் பல விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்தோம். தற்போது, அறுவடை நேரத்தில் வெளிமாநில தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவடையைப் புறக்கணித்து வருகிறோம். இதனால், தோட்டங்களில் தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால், விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வெளிமாநில தக்காளி வரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மகசூல் அதிகரித்து விலை குறையும் போது, தக்காளி ஜாம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேளாண் வணிகத்துறை உரிய வழிகாட்டுதல் வழங்கிட வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் அதிக பரப்பளவில் ஒரே பயிர் சாகுபடியைத் தவிர்த்து, மாற்றுப் பயிர் சாகுபடிக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x