மதுரை: தமிழக சட்டப்பேரவையில் இன்று 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவித்துள்ளதாக வர்த்தக சங்கங்கள் வரவேற்றுள்ளன. ஆனால் எந்த அறிவிப்பும் விவசாயிகளுக்கான அறிவிப்பாக இல்லை, மானியங்கள் வழங்குவதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை வளப்படுத்துவதற்கான அறிவிப்புகள் என விவசாய சங்கங்களும் குற்றஞ்சாட்டியுள்ளன.
மேலும், விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கேட்ட கருத்துகளுக்கு செவிசாய்க்கவில்லை என விவசாயிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன்: உழவுத் தொழிலுக்குப் பல்வேறு ஊக்கம் அளிக்கும் திட்டங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டை வரவேற்கிறோம். ரூ.52.44 கோடியில் சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்ய இயற்கை வேளாண்மைத் திட்டங்கள், மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்கான சிறப்புத் திட்டம், பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை” உருவாக்கப்படும், ரூ. 215 கோடியில் 17,500 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கல், ரூ.40.27 கோடியில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம், 1,168 கோடியில் 3 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.
பொருளாதார ரீதியாக சாத்தியமான விவசாய நடைமுறைகளை உள்ளடக்கிய கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்து விவசாயிகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளது.
வேளாண்மை மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ரத்தினவேலு: 2025-26-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்டில் அடுக்கடுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் அறிவித்து சாதனை படைத்துள்ளது. தரமான நெல் விதைகள் கிடைக்காமல் விவசாயிகளின் உற்பத்தி பாதிப்பை போக்க சான்றளிக்கப்பட்ட விதைகள் மானிய விலையில் வழங்க 1,73,000 ஏக்கரில் விதைப் பண்ணைகள் அமைக்கும் திட்டம் பாராட்டுக்குரியது. மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட 1% சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதுபோல் 40 வேளாண் விளை பொருட்களுக்கும் 1% சந்தைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர்: அனைத்து தரப்பு விவசாயிகளும் பயனடையும் வகையில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தைக்கட்டணம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது. எந்த துறையிலும் இல்லாத பெர்மிட் முறை நீக்கவில்லை. வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தருவிக்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு சந்தை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை மானியக் கோரிக்கையின்போது தமிழக முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
கரும்பு விவசாயிகள் சங்கத் மாநில துணைத் தலைவர் என்.பழனிச்சாமி: வேளாண் பட்ஜெட் கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. டன்னுக்கு ரூ.4000 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை, பட்ஜெட்டிலும் அறிவிக்கவில்லை. கரும்புக்கு ரூ.134 ஊக்கத்தொகை போதாது. அணைகள், ஏரிகள் போன்ற புதிய நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் கட்டிய மேலூர் பெரியருவியை ரூ.2 கோடியில் தூர்வார திட்டம் தயாரித்து அனுப்பியும் நிதி ஒதுக்கவில்லை. மேலும் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க எந்த நிதியும் ஒதுக்காதது விவசாயிகள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையின்மையை காட்டுகிறது.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில கவுரவ தலைவர் எம்.பி.ராமன்: தென்மாவட்ட விவசாயிகள் பயனடையும் வைகை அணையில் 72 அடியில் 20 அடிக்கு வண்டல் மண் படிந்துள்ளதால் அணையின் நீர்த்தேக்கும் அளவு குறைந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல வழியின்றி விவசாயம் பாதித்துள்ளது. அணையை தூர்வார வேண்டும் என பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில் 6 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியும் பட்ஜெட்டில் அறிவிக்காதது பெருத்த ஏமாற்றம். மதுரை மாவட்டத்தில் மல்லிகைப் பூக்கள் உற்பத்தி தினந்தோறும் ஆயிரம் டன் உற்பத்தியாவதால் குளிர்பதன கிடங்குகள், வாசனை திரவிய தொழிற்சாலை அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தோம். அந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளை கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு அழைத்த அரசு, விவசாயிகளின் ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை.
காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.அர்ச்சுணன்: சட்டப்பேரவையில் பச்சைத் துண்டுகளை அணிந்து கொண்டு விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்துள்ளது திமுக அரசு. விவசாயத் துறையில் அரசின் பொது முதலீடு அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்பது முக்கிய அம்சம். இதனை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. தமிழகத்திற்கு ஒரு பருவ காலத்திற்கு விதை நெல் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் தேவை. இதில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 17% தான், மீதமுள்ள 83% விதை நெல்லுக்கு விவசாயிகள் தனியாரையும் கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பித்தான் சாகுபடி நடக்கிறது. 2021 தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் சில்லறை சலுகைகள், கார்ப்பரேட் தனியார் நிறுவனங்கள் பயனடையும் வகையில் மானியங்களை மட்டுமே வழங்கி விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூ.331568.76 கோடி. அதில் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கீடு ரூ.45,661கோடி. இது தமிழ்நாட்டின் மொத்த நிதி வருவாயில் 13.7% தான். இதை விட விவசாயத்தை யாரும் இழிவு படுத்த முடியாது. அந்த வகையில் திமுக அரசின் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது.