மதுரை: மதுரை - பெரியாறு பேருந்து நிலைய வணிக வளாகம் அதிமுக ஆட்சியில் கட்டத்தொடங்கி, இப்போது திமுக ஆட்சியிலும் தொடரும் நிலையில் சுற்றுச்சூழல் அனுமதியும், மின் இணைப்பும் கிடைக்காததாலே தற்போது வரை திறக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த வணிக வளாகம் கட்டி முடிந்தும் திறக்கப்படாததால் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.7 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலா நகரான மதுரையில் கடந்த காலத்தில் ரயில் நிலையம் அருகே பெரியாறு பேருந்து நிலையம், காம்பளக்ஸ் பேருந்து நிலையம் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டன. உள்ளூர் மாநகர பேருந்துகள் மட்டுமே இந்த பேருந்து நிலையங்களில் இயக்கப்பட்டு மக்கள், தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்களுடைய அன்றாட வாழ்வியல் பயணங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்து வந்தன. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த இரு பேருந்து நிலையங்களையும் இடித்துவிட்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.174 கோடியில் பேருந்து நிலையத்துடன் 474 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் கட்டப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகம் வெறும் வணிகத்திற்கான வணிக வளாகமாக மட்டுமில்லாது சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள், பொருட்கள் வாங்குவதற்கும் பொழுதுப்போக்குவதற்குமான ‘மால்’ கட்டப்பட்டுள்ளது.
இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் வரும் சுற்றுலாப்பயணிகளுடைய வாகனங்களை நிறுத்துவதற்கான ‘அண்டர் கிரவுண்ட் வாகன பார்க்கிங்’ உள்ளன. குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தக்கூடிய வசதி இந்த பார்க்கிங்கில் உள்ளது. கடைகளை ஏலம் விட்டு வியாபாரிகள், பொதுமக்கள் வர ஆரம்பித்தால் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.7 கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தற்போது வரை திறக்கப்படாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது இந்த வணிக வளாகத்தின் கட்டுமானப்பணி வர்ணம் பூசப்பட்ட நிலையில் மின்சாரப்பணிகள், எக்ஸ்லேட்டர் உள்ளிட்ட பிற பணிகள் நடந்து வருகிறது.
இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகள் ஒதுக்கீட்டில் பழைய பெரியார் பேருந்து நிலைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை வெளிப்படையாக பொது ஏலம் விடவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போது வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் வணிக வளாகம், அதிமுக ஆட்சியில் கட்டத்தொடங்கி, தற்போது திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. அடுத்த சட்டசபை தேர்தல் நடக்க உள்ளநிலையில் இன்னும், பெரியாறு பேருந்து நிலையம் வணிக வளாகம் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி சிலர் கூறுகையில், ‘‘மீனாட்சியம்மன் கோயில் உயரத்திற்கு மேல் எந்த கட்டிடமும் கட்டக்கூடாது என்ற விதிமுறை மதுரையில் உள்ளது. அந்த விதிமுறையை பின்பற்றி, இந்த வணிக வளாகத்திற்கு கட்டிட வரைப்பட அனுமதி வாங்குவதில் ஒரு ஆண்டு சிக்கல் நீடித்தது. தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளது.
ஆனால், தற்போது வரை மின் இணைப்பு பெறப்படவில்லை. அதற்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. மேலும், இந்த வணிக வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட கடைகள், பொதுமக்கள் வருகை அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த அனுமதி தற்போது வரை கிடைக்கவில்லை. அதை பெறுவதற்கான பணிகள் நடக்கிறது. சமீபத்தில் இந்த வணிக வளாகத்தை ஆணையாளர் சித்தா பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்’’ என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ‘‘வணிக வளாகத்தின் பணி 99 சதவீதம் முடிந்துள்ளது. மிக விரைவில் திறக்கப்பட உள்ளது. எந்த சிக்கலும் இல்லை” என்றார்.