புதுக்கோட்டை: புதுக்கோட்டை திமுக மாநகர பொறுப்பாளர் அறிவிப்புக்கு எதிராக உள்ளூர் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு புதுக்கோட்டையில் உள்ள 42 வட்டச் செயலாளர்களில் 39 பேர் உட்பட பலர் சென்னை அறிவாலயத்துக்கு சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளராக இருந்த செந்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தப் பதவியைப் பெறுவதற்கு திமுகவில் அரு.வீரமணி, எம்.எம்.பாலு, சுப.சரவணன் உள்ளிட்ட நிர்வாகள் கடும் முயற்சி செய்து வந்தனர். மேலும், செந்திலின் மகனும், நகர இளைஞரணி அமைப்பாளருமான கணேஷூக்கு அப்பதவியை அளிக்க வேண்டும் என திமுகவில் ஒரு தரப்பினர் கட்சித் தலைமையை வலியுறுத்தி வந்தனர்.
செந்திலின் குடும்பத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு நெருக்கமாக இருப்பதாலும், அண்மையில் நடைபெற்ற கணேஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டதாலும் கணேஷூக்குத்தான் அப்பதவி கிடைக்கும் என்று அக்கட்சியினரிடையே பேசப்பட்டு வந்தது.
கட்சியினர் மறியல்: இந்நிலையில், மாநகர் பொறுப்பாளராக திமுக வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வே.ராஜேஷ் நியமிக்கப்படுவதாக மார்ச் 12-ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினமே புதுக்கோட்டையில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகம் அருகே திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறுநாளும் கட்சி அலுவலகத்தில் இவ்விவகாரம் தொடர்பாக ஏராளமானோர் கூடினர்.
பின்னர், சென்னை அறிவாலயத்தில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்து, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவின் பரிந்துரையால் தான் ராஜேஷூக்கு பதவி கிடைத்தாக சமூக வலைதளங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
நிபந்தனையுடன் அமைச்சர் பேட்டி: இதனிடையே, புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற புதிய பேருந்துகள் தொடக்க விழாவில், செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பாக, உட்கட்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டாம் என்ற நிபந்தனையோடு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி அளித்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாநகர் பகுதியில் உள்ள 42 திமுக வட்டச் செயலாளர்களில் 39 பேர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சென்னை அறிவாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை மூலம் மாநகர பொறுப்பாளர் பிரச்சினை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பொறுப்பாளர் அறிவிப்புக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.