திருச்சி: ஸ்ரீரங்கம் மேலூர் அய்யனார் பள்ளிக்காக மூலத்தோப்பில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டிடம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் ராஜன் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் மேலூரில் அய்யனார் உயர்நிலைப்பள்ளி, 2014-ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அப்போதைய அதிமுக ஆட்சியில், ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் 2018-ம் ஆண்டு ரூ.1.60 கோடி மதிப்பில் அய்யனார் உயர்நிலைப் பள்ளிக்கென 21 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்டிடம் மேலூர் பகுதியில் கட்டப்படாமல், அங்கிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் கட்டப்பட்டதால் மாணவர்களை அங்கு அனுப்ப பெற்றோர் மறுத்துவிட்டனர்.
இதனால் கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் எவ்வித உபயோகமும் இன்றி புதிய பள்ளிக் கட்டிடம் பூட்டியே கிடந்தது. அதிமுக ஆட்சி மாறி, திமுக ஆட்சிக்கு 4 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தும் புதிய கட்டிடம் திறப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத் தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் செல்விகுமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை அண்மையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், பயன்பாடு இல்லாமல் இருக்கும் அய்யனார் பள்ளி புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
அங்கு, மேலூர் அய்யனார் பள்ளி மாணவர்கள் வராதபட்சத்தில், மாணவர் எண்ணிக்கையால் கடும் இட நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும், ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி டாக்டர் ராஜன் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, புதிய கட்டிடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உத்தரவின்பேரில், ராஜன் பள்ளியை சேர்ந்த 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் புதிய கட்டிடத்தை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து, உடனடியாக புதிய கட்டிடத்தை திறந்த ராஜன் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தினர். ராஜன் பள்ளி ஆண்டுவிழா விரைவில் நடைபெறுவதால், ஆண்டுவிழா முடிந்தபிறகு, மார்ச் 24-ம் தேதி முதல் புதிய கட்டிடத்துக்கு அப்பள்ளி மாணவர்கள் செல்வார்கள் என வட்டாரக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.