பழநி: கடந்த 12 ஆண்டுகளாக நகராட்சிக்கு ரூ.6 கோடி சொத்துவரி பாக்கியை செலுத்த பழநி கோயில் தேவஸ்தானம் மறுத்து வரும் நிலையில், உண்டியல் காணிக்கை மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு சதவீதம் தொகையை வழங்க நகராட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்காக, தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தண்டபாணி நிலையம், வேலவன் விடுதி, இடும்பன் குடில், சின்னக்குமாரர் விடுதி என்ற பெயர்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளுக்கான சொத்துவரியை பழநி நகராட்சிக்கு தேவஸ்தானம் ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
ஆனால், 2013-ம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக தேவஸ்தானம் வரி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து வரி பாக்கி ரூ.6 கோடியாக உயர்ந்துள்ளது. தேவஸ்தானம் பக்தர்களுக்கு சேவை செய்யும் நிறுவனம் என்பதால், சொத்துவரி செலுத்தவில்லை என தேவஸ்தானம் தரப்பில் கூறப்படுகிறது.
தேவஸ்தானம் சேவை நிறுவனமாக இருந்தாலும், கோயில் பிரசாதம், தரிசனக் கட்டணம், தங்கும் விடுதி உள்ளிட்டவை வருமான இனங்களாகும். இவற்றை சேவையாக செய்து வருவதாக தேவஸ்தானம் கூறினாலும், பக்தர்களிடம் காணிக்கை, நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்யப்படுகிறது.
எனவே, சொத்துவரி பாக்கியை செலுத்த வேண்டும் என நகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் தேவஸ்தானம் தரப்பில் ரூ.1.13 கோடி சொத்துவரி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மீதமுள்ள ரூ.6 கோடி சொத்து வரியை செலுத்த தேவஸ்தானம் மறுத்து வருகிறது.
தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் காலங்களில் பக்தர்கள் விட்டுச் செல்லும் குப்பை, உணவுக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தவிர, நகர் பகுதியில் தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளையும் நகராட்சி நிர்வாகமே ஏற்படுத்தி தருகிறது. இதற்கான செலவில் 50 சதவீதம்கூட தேவஸ்தானம் தரப்பில் நகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்படுவதில்லை.
கோயில் மூலம் பழநி நகராட்சிக்கு எந்த வருமானமும் இல்லை. சொத்துவரி உள்ளிட்ட வரி இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டும் வைத்து, உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்யவேண்டிய நிலை உள்ளது. ஆனால், தேவஸ்தானம் தரப்பில் பெரிய தொகையை வரி பாக்கியாக வைத்துள்ளதால், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, பழநி கோயில் உண்டியல் காணிக்கை மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு சதவீதம் தொகையை உள்ளாட்சி நிதியாக நகராட்சிக்கு வழங்க வேண்டும் என்று நகராட்சி தரப்பில் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சொத்துவரி தொடர்பாக பழநி தேவஸ்தானம் மற்றும் நகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.