காரைக்குடி: காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை ஆங்கிலத்தில் ரசீது வழங்குவதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில். இந்துசமய அறநிலையத் துறையின் காட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி- பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, மார்ச் 11-ம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வருகின்றன. மார்ச் 18-ம் தேதி இரவு கரகம், மதுக்குடம், முளைப்பாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 19-ம் தேதி காலை காவடி, பால்குடம், பூக்குழி இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மார்ச் 20-ம் தேதி இரவு அம்மன் திருவீதி உலாவும், மார்ச் 21-ம் தேதி மாலை சந்தனக்காப்பு அலங்கார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
இவ்விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அர்ச்சனை, பால்குடம், கரகம் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களைச் செலுத்தும் பக்தர்களிடம் அறநிலையத்துறை கட்டணம் வசூலிக்கிறது. இதற்காக பக்தர்களுக்கு கொடுக்கப்படும் ரசீதுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், ‘ தமிழகத்தில் அறநிலையத் துறை கோயிலில் தமிழில் ரசீது கொடுக்காமல் ஆங்கிலத்தில் கொடுப்பது வேதனையாக உள்ளது. தேசிய வங்கிகளில்கூட ஆங்கிலம், தமிழில் படிவம் கொடுக்கின்றனர். ஆனால், தமிழக அரசின் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் தமிழைப் புறக்கணித்துள்ளனர். வெளிமாநில பக்தர்கள் வசதிக்காக இரு மொழிகளில்கூட ரசீது கொடுக்கலாம். மேலும் எழுத்துகளும் சிறிதாக இருப்பதால் படிக்கவே சிரமமாக உள்ளது’ என்று கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்துசமய அறநிலையத்துறை மென்பொருள் மூலமே பிரிண்ட் எடுத்து ரசீது கொடுக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இதேபோல்தான் உள்ளது. ரசீதை தமிழில் மாற்றவும், எழுத்தைப் பெரிதாக்கவும் ஆணையரகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளோம்’ என்றனர்.