தோட்ட வீடுகளை கண்காணிக்க ஆயுதம் ஏந்திய 25 வாகன ரோந்து குழு: திருப்பூர் எஸ்.பி. தகவல்


திருப்பூர்: காங்கயம்-பல்லடம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்ட வீடுகள் உள்ள பகுதிகளை கண்காணிக்க 25 ஆயுதம் ஏந்திய இருசக்கர ரோந்துக் குழுவினர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரீஷ் யாதவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவிநாசிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சேமலைக்கவுண்டம்பாளையத்தில் கடந்த நவம்பர் மாதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனது தலைமையில் 8 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க கடுமையாக பணியாற்றி வருகிறோம். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திருப்பூர் காவல் துறையால் மாவட்டம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.

குறிப்பாக 5,012 கேமராக்கள் குடியிருப்புகள் மற்றும் தோட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. குடியிருப்புகள் மற்றும் தோட்ட வீடுகள் உள்ள பகுதிகளை கண்காணிக்க காங்கயம்-பல்லடம் பகுதிக்கு 25 ஆயுதம் ஏந்திய இருசக்கர ரோந்து குழுவினர் தனியாக நியமிக்கப்பட்டு, கண்காணித்து வருகின்றனர், என்றார்.

x