உடுமலை: உடுமலையில் நேற்று மத்திய பேருந்து நிலையம் அருகே உடுமலை-மடத்துக்குளம் மக்கள் பேரவை, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றோர் பேசியதாவது: பழநி உடன் உடுமலை மற்றும் மடத்துக்குளத்தை இணைப்பதை மக்கள் விரும்பவில்லை. எனவே, அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும். ஏற்கெனவே திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதால், எவ்வித முன்னேற்றத்தையும் உடுமலை பெறவில்லை. தற்போது பழநி உடன் இணைத்து இப்பகுதி மக்களை பந்தாடும் முடிவை நிறுத்த வேண்டும்.
இரு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை. இதுதொடர்பாக உடுமலை, மடத்துக்குளம் பகுதி மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நல்ல முடிவை முதல்வர் எடுக்க வேண்டும், என்றனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.