சென்னை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் அழைப்பிதழ் வழங்கினார்.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் வரும் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி 7 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதையடுத்து திமுகவின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழுக்கள் அந்த மாநிலங்களுக்கு சென்று முதல்வர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை வழங்கி, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி மாநிலத் தலைவர் பல்லா சீனிவாச ராவ், கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரை சந்தித்து திமுக குழுவினர் அழைப்பு விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்து, முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.